தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடந்தது. 10-ம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 28-ம் தேதி துவங்குகிறது. இதேபோல் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 9-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது. இதனால் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு மட்டும் இறுதி செமஸ்டர் தேர்வு முன்கூட்டியே நடத்த வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான தேர்வு தேதிகளை மாற்றி, திருத்திய கால அட்டவணையை, தொடக்க கல்வித்துறை நேற்று வெளியிட்டது. அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான 3-வது செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 7-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடக்கிறது.தேர்வு விவரம் ஒவ்வொரு வகுப்பிற்கும் பாட வாரியாக நடைபெறும்.
இந்த அட்டவணையை பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களின்படி தேர்வுகளை நடத்த அனைத்து வகை பள்ளிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 12-ம் தேதியும், 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 18-ம் தேதியும் தொடங்கும். இருப்பினும் பள்ளியின் கடைசி வேலை நாள் வரை ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.