சென்னை: வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு சென்னை மாநகர பகுதியில் சாலைகளில் பள்ளம் தோண்ட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். சென்னை பெருநகரில் மாநகராட்சி மூலம் மழைநீர் வடிகால் பணி, குடிநீர் வாரியம் மூலம் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் அமைத்தல், பிஎஸ்என்எல் மற்றும் பல்வேறு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் கேபிள் பதிக்கும் பணி, மின்சார வாரியம் மூலம் கேபிள் பதிக்கும் பணி என சென்னை மாநகரில் சாலை வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.
முதலியன இந்த சர்வீஸ் நிறுவனங்கள் சில நேரங்களில் பணிகளை விரைந்து முடிக்காததால், ரோடு கட்டிங் சீரமைக்கப்படாமல், பாழடைந்த நிலையில் உள்ளது. பணிகள் நிறைவடையாததால், மாநகராட்சி நிர்வாகமும் சாலை சீரமைப்பு பணியை துவக்க முடியாமல் திணறி வருகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் சாலை வெட்டும் பணியை உரிய நேரத்தில் முடிக்காததாலும், முறையான தடுப்புகள் இல்லாததாலும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அந்த பள்ளங்களில் விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 30-ம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை சாலையில் பள்ளம் தோண்ட சென்னை மாநகராட்சி கமிஷனர் தடை விதித்து உத்தரவிட்டார். மாநகராட்சி கமிஷனரிடம் அனுமதி பெற்று, அவசர தேவைக்கு மட்டும், ரோடு வெட்ட அனுமதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில், சாலைகளில் பள்ளம் தோண்ட விதிக்கப்பட்ட தடையை நீக்கி, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.