சென்னை: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவே உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால், இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயர்நீதிமன்றத்தை சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டது. நாளடைவில், அதை வெகுதூரம் கருதி, உயர் நீதிமன்ற வளாகத்தையே பாதையாகப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனை கருத்தில் கொண்டு, நீதிமன்ற வளாகத்தின் வழித்தடங்களை மக்கள் எதிர்காலத்தில் கோராத வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாள் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படும் என நீதிமன்ற நிர்வாகம் அறிவித்தது.
இந்த வழக்கம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் கடைசி வாரத்தின் சனிக்கிழமை அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை மூடப்படும் என உயர்நீதிமன்ற நிர்வாகப் பதிவாளர் பி.ஹரி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.