சென்னை: சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் சேவை பெரிதும் உதவியாக உள்ளது. தற்போது சென்னையில் விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரையிலும், பரங்கிமலையில் இருந்து சென்ட்ரல் வரையிலும் 54 கி.மீ., தூரத்திற்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளில், 2024-ம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர், இது முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையாகும். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2024 வரை 35.53 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் ஆன்லைன் டிக்கெட் எடுப்பது இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அனைத்து பயணிகளும் CMRL மொபைல் ஆப், Paytm, Phonepe, சிங்கார சென்னை கார்டு, CMRL பயண அட்டைகள் மற்றும் டிக்கெட் விற்பனை நிலையங்கள் போன்ற பிற வழிகளில் டிக்கெட்டுகளைப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால், பயணிகள் வாட்ஸ்அப் சாட்போட் 8300086000ஐ பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை வாங்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.