சென்னை: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயில் சேவை கடந்த 19-ம் தேதி தொடங்கியது. கட்டணம் அதிகம் என்பதால், அதை குறைத்து, பீக் ஹவர்ஸில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், ஏசி ரயில் கால அட்டவணை மற்றும் இயக்கம் குறித்து பயணிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெற்கு ரயில்வே சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
பயணிகள் தங்கள் கருத்துக்களை 6374713251 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் மூலம் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், பயணக் கட்டணத்தை குறைக்க வேண்டும், ரயில் இயக்க நேரத்தை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பல்வேறு பயணிகள் வலியுறுத்தி வந்தனர். இதனை கருத்தில் கொண்டு மதியம் 3.40 மணிக்கு இயக்கப்படும் ஏசி மின்சார ரயிலை வெயில் கடுமையாக இருக்கும் மதியம் 2 அல்லது 2.30 மணி என மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த 5 மாதங்களில் மற்ற ஏசி புறநகர் மின்சார ரயில் சேவைகளும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில், பயணிகளின் மற்றொரு கோரிக்கையான ஏசி மின்சார ரயில்களுக்கான கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே கட்டணத்தை நிர்ணயிக்க முடியாது என்பதாலும், நாடு முழுவதும் உள்ள ஏசி புறநகர் மின்சார ரயில் சேவைகளுக்கான கட்டணத்தை, பயணித்த தூரத்தின் அடிப்படையில் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்வதாலும், தெற்கு ரயில்வே இதனை தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் 10 கி.மீ தூரத்திற்கு 35 மற்றும் ரூ. 150 தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.