சென்னை: மணப்பாக்கம் இல்லத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் இன்றி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று காலை மரணம் அடைந்தார்.
தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து அவரது உடல் பிற்பகல் 1 மணியளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டது. வழிநெடுகிலும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு காங்கிஸ் தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மணப்பாக்கம் இல்லத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மனைவி வரலட்சுமிக்கு ஆறுதல் தெரிவித்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய் குமார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் டெல்லியில் இருந்து இன்று சென்னை வர உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல, பல்வேறு மாநிலங்களில் உள்ள தலைவர்களும் வருகை தர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் இன்று பிற்பகல் வரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு மணப்பாக்கம் மின் மயானத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் தகனம் செய்யப்படுகிறது.