சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள், குடிநீர், சாலை, மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களை மழைக்காலத்திற்கு முன்பு முடிக்க வேண்டும். தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து, பணிகளை முதலில் முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சிகள் மற்றும் 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். விவரங்கள்: அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், குறிப்பாக குடிநீர், சாலை, மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், சுகாதாரம் மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில், ரூ.8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான செலவில் 15 ஆயிரம் கி.மீ.க்கும் அதிகமான சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகர்ப்புற மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மெட்ரோ ரயில், புதிய குடிநீர்த் திட்டங்கள், மழைநீர் வடிகால் பணிகள் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாநகராட்சிகளில் 3,199 பணிகளும், நகராட்சிகளில் 4,972 பணிகளும் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை விரைவில் தொடங்கி வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பு முடிக்க வேண்டும். அதேபோல், மின்சார வாரியம், நீர் வழங்கல், நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு இறுதிக் கட்டப் பணிகளை முடிக்க வேண்டும், பாதி முடிக்கப்பட்ட பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும்.
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்து, தண்ணீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும். தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், முதலில் அங்கு பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதிச் செயலாளர் உதயச்சந்திரன், நகராட்சி நிர்வாகச் செயலாளர் தா.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர்கள், துணை ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.