கல்வித்துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாகவும், இது இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குவதாகவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
மாணவர்களுக்கான எண்கணித போட்டி
இந்தியன் அபாகஸ் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அரசுப் பள்ளி மற்றும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள மாநகராட்சிப் பள்ளி மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கணித அறிவை மேம்படுத்த இலவசப் பயிற்சி அளித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தேசிய எண்கணிதம் மற்றும் திறன் மேம்பாட்டு போட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்றது.
அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அப்பன்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர். இதனைத் தொடர்ந்து மாணவர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழகத்தில் மாணவர்களின் கல்விக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
தமிழக அரசின் திட்டங்கள்
கல்வியில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாகவும், இது இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குவதாகவும் குறிப்பிட்டார். மாணவர்களுக்காக நான் முதல்வன் திட்டம், புதுமை மகளிர் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். முன்னதாக பேசிய பீட்டர் அல்போன்ஸ், குழந்தைகளின் அறிவை மேம்படுத்த இந்த எண்கணித போட்டி உதவும் என்பதில் சந்தேகமில்லை என்றார். தமிழகத்தில் கல்விக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இதனை குழந்தைகள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மாணவர்கள் சாதிப்பார்கள்
இந்தப் போட்டி குறித்து இந்தியன் அபாகஸ் நிர்வாக இயக்குநர் பஷீர் அகமது பேசுகையில், உலக அளவில் இந்திய மாணவர்களை எண்கணிதம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சிறந்து விளங்கச் செய்யும் இலக்கை நோக்கி தொடர்ந்து பயணித்து வருகிறோம் என்றார். மேலும் எங்களது முதல் இலக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள எளிய மற்றும் அனைத்து மாணவர்களும் இந்த கணித பயிற்சியை பயன்படுத்தி சிறந்த மாணவர்களாக மாற வேண்டும் என்றார்.