சென்னை: தமிழக சுற்றுலாத்துறை மற்றும் அறநிலையத்துறை இணைந்து ‘தி இந்து’ குழுமம் தயாரித்த 2 புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சுற்றுலாத் துறையும், ‘தி இந்து’ குழுமமும் இணைந்து, ‘தமிழ்நாட்டின் கோட்டைகள்: ஒரு நடை’ என்ற சுற்றுலா தகவல் களஞ்சிய புத்தகத்தை தயாரித்துள்ளன.
அதேபோல், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ‘தி இந்து’ குழுமத்துடன் இணைந்து, நாட்டார் தெய்வங்களின் வரலாறு, வழிபாடு, சடங்குகள் குறித்து விளக்கும் வண்ணப் புகைப்படங்களுடன் ‘தமிழ்நாட்டின் நாட்டார் தெய்வங்கள்’ என்ற புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 2 புத்தகங்களையும் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
நூல் அறிமுகம்: ‘Forts of Tamil Nadu: A Walk-Through’ என்ற நூலில், தமிழகத்தின் புகழ்பெற்ற 17 கோட்டைகளின் கட்டிடக்கலை, அவற்றின் பாதுகாப்பு அம்சங்கள், இந்து குழுமத்தின் சுற்றுலாத்துறை, சிறப்பு எழுத்தாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். கோட்டைகளை கட்டியவர்கள், அவற்றை கைப்பற்ற நடந்த போர்கள், ராணுவ பலம், அன்றைய அரசியல் நிகழ்வுகள், சர்வதேச வர்த்தகம் போன்ற வரலாற்று அம்சங்கள் ஆய்வுக் கட்டுரைகள் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புத்தகம் மொத்தம் 228 பக்கங்கள் கொண்டது.
நாட்டார் தெய்வ வழிபாட்டிலும், அவற்றின் பண்புகளிலும் விரைவான மாற்றங்கள் ஏற்பட்டுள்ள சூழலில், இந்தப் பாரம்பரிய தெய்வங்களையும், அவற்றின் வரலாற்றையும் மீட்டெடுக்க உதவும் காலத்தின் பொக்கிஷம் ‘தமிழ்நாட்டின் நாட்டார் தெய்வங்கள்’ என்ற நூல். அறநிலையத் துறை மற்றும் ‘தி இந்து’ குழுமம் இணைந்து இந்நூலை தமிழில் மொழிபெயர்க்கும் பணி நடந்து வருகிறது.
சுற்றுலாத் துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, முதன்மைச் செயலர் சிவதாஸ் மீனா, சுற்றுலா மற்றும் அறநிலையத் துறை செயலர் பி.சந்திரமோகன், சுற்றுலா ஆணையர் சி.சமயமூர்த்தி, அறநிலையத்துறை ஆணையர் கே.வி.முரளிதரன், ‘தி இந்து’ குழுமத் தலைவர், வெளியீட்டாளர் நிர்மலா லஷ்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.