சென்னை: சுப்ரமணிய ஐயர் அறக்கட்டளை விரிவுரையை ஆண்டுதோறும் சென்னை பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி 2024-25-ம் கல்வியாண்டுக்கான சொற்பொழிவு மார்ச் 14-ம் தேதி இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவது எப்படி, இந்த மதம் ஏன் தேவை என்ற தலைப்புகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மதியம் 2 மணி முதல் 5 மணி வரை சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பொறியாளர் கே.சிவக்குமார் கலந்து கொண்டு உரை நிகழ்த்த இருந்தார். நிகழ்ச்சியை துறைத் தலைவர் (பொறுப்பு) ஜெ.சௌந்தரராஜன் ஏற்பாடு செய்திருந்தார். இது கல்வியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் வலதுசாரி அமைப்புகளின் உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்களை ஈர்த்தது.

புகழ்பெற்ற மெட்ராஸ் பல்கலைக்கழக வளாகத்தில் மதத்தைப் பரப்புவது தொடர்பான கருத்தரங்கம் மாணவர்களிடையே தவறான முன்னுதாரணமாக அமையும் என்று ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. மேலும், நிகழ்ச்சியை ரத்து செய்து, ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்வு தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் இந்த விவகாரம் சர்ச்சையானது.
இதுகுறித்து விளக்கமளித்த சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.ஏழுமலை. ஆளுநரின் தனிச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், ”பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை நடத்தும் சுப்பிரமணிய அய்யர் அறக்கட்டளை சொற்பொழிவு நடத்த, பல்கலையில் முறையான அனுமதி பெறவில்லை. எனவே, இந்நிகழ்ச்சியை ரத்து செய்ய, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சுப்பிரமணிய ஐயர் அறக்கட்டளை விரிவுரையை நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்வதாக தொல்லியல் துறை தலைவர் சௌந்தரராஜன் அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததன் நோக்கம் குறித்து பேராசிரியர் சௌந்தரராஜன் கடிதம் மூலம் பல்கலைக்கழக பதிவாளருக்கு விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.