சென்னை: ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக சிஐடியு கூட்டமைப்பு சங்கங்கள் எச்சரித்துள்ளன. மீட்டர் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் நேற்று 3 குழுக்களாக சென்னையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அண்ணாசாலை தாராபுரம் டவர் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர். ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும், பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். இதனால் அண்ணாசாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல் எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:- ஆட்டோ தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 1.20 லட்சம் ஆட்டோக்களில் 60 சதவீத ஆட்டோக்கள் ஓடவில்லை. மீட்டர் கட்டண உயர்வை நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். இல்லையெனில், போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையை முன்னிட்டு, ஆட்டோக்களுடன் சென்று, தலைமைச் செயலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே ஆட்டோ தொழிலாளர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.இது தொடர்பாக முடிவெடுக்கும் நேரத்தில் தேவையில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆட்டோ தொழிலாளர்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் நேற்று சென்னையில் ஆட்டோக்கள் பரவலாக இயக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிக இடையூறு இன்றி பயணம் செய்தனர். மாலை 6 மணிக்கு மேல் அனைத்து ஆட்டோக்களும் வழக்கம் போல் இயங்கின.