தண்டையார்பேட்டை:சென்னை மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்படி, மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் ஒரு நாள் முழுவதும் மக்கள் துப்புரவு என்ற பெயரில் ஒவ்வொரு வார்டுகளிலும் பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூரில் உள்ள 14 வார்டுகள், ராயபுரத்தில் ஒரு வார்டு உட்பட தண்டையார்பேட்டை மண்டலத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.
மக்கள் துப்புரவு பணி என்ற பெயரில், சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், செயற்பொறியாளர் திருநாவுக்கரசு ஆகியோர் ஒன்று திரண்டு, சாலையோரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டுதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொக்லைன் இயந்திரம் மூலம் குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். அதன்படி ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் தினமும் ஒரு வார்டு என்ற பெயரில் சுத்தம் செய்து வருகின்றனர். இதன் மூலம் மாநகராட்சி வார்டுகள் சுத்தமாக காட்சியளிக்கிறது.
தண்டையார்பேட்டை மண்டல அலுவலர் விஸ்வநாதன் கூறுகையில், “”தொகுதி துப்புரவு பணி என்ற பெயரில் பணியாளர்கள் இதுபோன்ற பணியில் ஈடுபட்டால், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆரோக்கியமான மாநகராட்சியாக தண்டையார்பேட்டை மண்டலம் மாறும். ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் தற்போது 6 வார்டுகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. மேலும், படிப்படியாக மற்ற வார்டுகளும் சுத்தம் செய்யப்படும்,” என்றார்.