சென்னை: தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்ததால் நேற்றும் சென்னையில் குப்பைகள் தேங்கி கிடந்தன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டு மண்டலங்களிலும் தனியார் மயமாக்கப்பட்டதை கைவிட்டு விட்டு பழைய முறைப்படியே குப்பை அள்ளும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் அவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்று தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக சென்னையில் 5, 6 ஆகிய இரண்டு மண்டலத்துக்கு உட்பட்ட ராயபுரம், வால்டாக்ஸ் ரோடு, பாரிமுனை, கொத்தவால் சாவடி, அண்ணா பிள்ளை தெரு, எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலை, புதுப்பேட்டை வேலாயுதம் தெரு, புதுப்பேட்டை கூவம் சாலை உள்பட அனைத்து இடங்களிலும் சாலைகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.