தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளார். தொழில்முனைவோர்களை நேரில் சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சிக்கான முதலீடுகளை ஈர்ப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக இந்த பயணம் அமைந்துள்ளது. இந்த பயணம் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை நீடிக்கலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதல்வராக பதவியேற்ற பிறகு ஸ்டாலின் தொழில் வளர்ச்சி குறித்த உன்னத இலக்குகளை முன்வைத்து செயல்பட்டு வருகிறார். 2030க்குள் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GSDP) ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்பது அவரது பிரதான நோக்கம். இதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளில் முதலீட்டாளர்களை சந்தித்து, பல்வேறு தொழில் ஒப்பந்தங்களை செய்து வந்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ரூ.6,100 கோடி முதலீட்டுகளை பெற முதல்நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா நாடுகளில் மொத்தம் ரூ.12,000 கோடியுக்கும் மேற்பட்ட முதலீடுகள் தமிழ் நாட்டில் நிலைபெற வழிவகை செய்யப்பட்டது. இது தொழில் வாய்ப்புகளை உருவாக்கியதோடு, தொழில்துறை ஊக்கத்திற்கும் முக்கிய தூணாக இருந்தது.
இம்முறை இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தின் போது, முக்கிய தொழிலதிபர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களுடன் சந்திப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, நிதி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் இந்த பயணத்தில் முதல்வருடன் இணைகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வெகு தொலைவில் இல்லாத நேரத்தில், இந்த வகை வெளிநாட்டு பயணங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக் கதையை வலுப்படுத்தும் வகையில் இருக்கும். மேலும், வெளிநாட்டு முதலீடுகள், வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் போன்ற அம்சங்களில் இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.