மீனம்பாக்கம்: சைக்கிள் பேரணியில் பங்கேற்கும் வீரர்களை வரவேற்று மெரினாவில் கடலோர பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்படும் என சிஐஎஸ்எப் டிஐஜிக்கள் அருண்சிங், சிவக்குமார் ஆகியோர் தெரிவித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் ராஜாத்திய சோழன் மண்டல பயிற்சி மையத்தில் இருந்து சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கடந்த 7-ம் தேதி ‘பாரத் செக்ரேடமா சைக்லோத்தான்’ (கடலோர சைக்லோத்தான்) என்ற சைக்கிள் பேரணியைத் தொடங்கினர்.
பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். 11 மாநிலங்கள் வழியாக நடைபெறும் இந்த சைக்லோத்தான், குஜராத் முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்குக் கடற்கரையையும், மேற்கு வங்கம் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரையையும் உள்ளடக்கும். சைக்ளோதானில் 14 பெண்கள் உட்பட 125 மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் கலந்து கொண்டு 6,553 கிலோமீட்டர் தூரம் 25 நாட்களுக்கு கடலோரப் பாதையில் பயணிப்பார்கள்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து சைக்கிள் பேரணியாக புறப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை குழுவினர் நேற்று இரவு சென்னை வந்தனர். அவர்களுக்கு இன்று சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், மாலை 5.30 மணிக்கு மெரினா கடற்கரையில் மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நடத்த உள்ளனர்.
சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை டி.ஐ.ஜி.க்கள் அருண்சிங் மற்றும் சிவக்குமார் ஆகியோர் மீனம்பாக்கம் மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் கூட்டாக கலந்து கொண்டு மெரினாவில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து விளக்கினர்.