சென்னை: “கடலோர பகுதியில் வாழும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து, சந்தேகத்திற்குரிய யாராவது நடமாடினால், அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்” என நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடலோர மக்களுக்காக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நம்ம நாடு மற்றும் மக்களின் நற்பெயரை கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டிற்குள் புகுந்து கோர சம்பவங்கள் நிகழ்த்தலாம். இதற்கு உதாரணம், மும்பையில் 26/11 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல். அந்த சம்பவத்தில் 175 பேர் உயிரிழந்தனர்.
இதுபோன்ற நிகழ்வுகளை தடுப்பதற்காக, கடலோர மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய யாராவது நடமாடினால், அருகிலிருக்கும் போலீஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
மேலும், “ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த, சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் 100 பேர், மேற்குவங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்கள். அவர்கள் உங்கள் பகுதியில் வந்தால், அவர்களை வரவேற்று, முடிந்தால் அவர்களுடன் சில தூரம் சென்று உற்சாகப்படுத்துங்கள்” என்றார்.
“நன்றி. வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ் மக்கள். ஜெய்ஹிந்த்” என கூறி வீடியோவை முடித்தார்.