மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்தே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து குறைய துவங்கியுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 14,404 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 9,601 கன அடியாக குறைந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 115.78 அடியாகவும், நீர் இருப்பு 86.88 டிஎம்சியாகவும் இருந்தது.