தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே தனியார் தொழில்நுட்பப் பூங்கா மூலம் வருங்காலத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்டத் தொழில் மையம் மூலம் தமிழக முதல்வரின் சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் கடன் பெற்று சிறப்பாக நடத்தி வருகிற தொழில் நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தார்.
அப்போது, தஞ்சாவூர் அருகே அரசு மானியத்துடன் தொடங்கப்பட்ட சர்டானிக்ஸ் என்கிற மென்பொருள் நிறுவனத்தை ஆய்வு செய்த ஆட்சியர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சர்டானிக்ஸ் மென்பொருள் நிறுவனம் ரூ. 35 கோடி திட்ட மதிப்பில் மாவட்ட தொழில் மையம் மூலமாக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிறுவனத்துக்கு அரசு முதலீட்டு மானியமாக ரூ. 33 லட்சம் வழங்கப்பட்டது.
தற்போது தஞ்சாவூர் அருகே மணக்கரம்பையில் 2 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இத்தொழில்நுட்பப் பூங்கா மூலம் 300}க்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இனிவரும் காலங்களில் இந்த எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் மானியத்துடன் ரூ. 1.77 இலட்சம் கடனுதவியுடன் மாவட்ட தொழில் மையம் மூலமாக தொடங்கப்பட்ட தனியார் டைல்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
ஆய்வின்போது, மாவட்ட தொழில் மைய மேலாளர் மணிவண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ. மதியழகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செ. கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.