சென்னை: உதவிப் பிரிவு அதிகாரி, வருமான வரி ஆய்வாளர், மத்திய கலால் ஆய்வாளர், போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆய்வாளர், அஞ்சல் ஆய்வாளர், உதவி அமலாக்க அதிகாரி, சிபிஐ துணை ஆய்வாளர், தணிக்கையாளர் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 37 வெவ்வேறு பதவிகளில் 14,582 காலியிடங்களை நிரப்ப பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பட்டதாரி இதற்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு பதவியைப் பொறுத்து 27, 30, 32 என மாறுபடும். SC மற்றும் ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் இந்தப் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தத் தேர்வு, நிலை-1 மற்றும் நிலை-2 என இரண்டு தேர்வுகளைக் கொண்டுள்ளது.
முதல் கட்டத் தேர்வு ஆகஸ்ட் 13 முதல் 30 வரை கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும். இதில் தகுதி பெறுபவர்களுக்கு, இரண்டாம் கட்டத் தேர்வு டிசம்பர் மாதம் கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும். பொருத்தமான கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புடன் பட்டதாரிகள் ஜூலை 5-ம் தேதி வரை www.ssc.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.