டெல்லி: மத்திய கல்வி அமைச்சகத்தின் 2023-24-ம் கல்வியாண்டுக்கான ‘யுடிஐஎஸ்இ’ தரவுகள் தெரிவிக்கின்றன. ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வித் தகவல் அமைப்பு (யுடிஐஎஸ்இ-பிளஸ்) என்பது நாடு முழுவதும் பள்ளிக் கல்வித் தரவைத் தொகுக்க மத்திய கல்வி அமைச்சகத்தால் பராமரிக்கப்படும் தரவு சேகரிப்பு தளமாகும்.
இந்தத் தகவல் அமைப்பில் பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 2023-24-ம் கல்வியாண்டில் நாட்டின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 24.8 கோடியாகும். இவர்கள் 10,97,973 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட 14,71,891 பள்ளிகளில் படித்து வருகின்றனர். 24.8 கோடி மாணவர்களுக்கு கற்பிப்பதில் 98,07,600 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
2023-24 கல்வியாண்டில் தொடக்கக் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரையிலான மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 37 லட்சம் குறைந்துள்ளது. 1 மற்றும் 2-ம் வகுப்புகளை உள்ளடக்கிய தொடக்கக் கல்வியில் 41.5 சதவீதமாகவும், 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வியில் 96.5 சதவீதமாகவும் உள்ளது. 8-ம் வகுப்பு வரையிலான இடைநிலைக் கல்வியில் 89.5 சதவீதமாகவும், 12-ம் வகுப்பு வரையிலான இடைநிலைக் கல்வியில் 66.5 சதவீதமாகவும் உள்ளது.
இடைநிலைக் கல்வியில் இடைநிற்றல் விகிதம் 10.9 சதவீதமாகவும், இடைநிலைக் கல்வியில் 5.2 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. மின்சாரம் மற்றும் பாலினம் சார்ந்த கழிவறைகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் நாட்டிலுள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிகளில் உள்ளன. 89 சதவீத பள்ளிகளில் நூலக வசதிகளும், 82.4 சதவீத பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும் உள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம், கம்ப்யூட்டர், இணையதள வசதிகள் போன்ற மேம்பட்ட வசதிகள் மிகக் குறைவான பள்ளிகளில் மட்டுமே உள்ளன.
57.2 சதவீத பள்ளிகளில் கணினி வசதியும், 53.9 சதவீத பள்ளிகளில் இணையதள வசதியும் உள்ளது. வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழலில், தொழில்நுட்ப வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இருப்பினும், இந்தியப் பள்ளிகளில் உள்ள குறைவான கணினி வசதிகள், சர்வதேசப் போட்டிக்கு நமது மாணவர்களைத் தயார்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கலை எடுத்துக்காட்டுகின்றன.
இந்தியப் பள்ளிகள் மாற்றுத்திறனாளி மாணவர்களின் வசதிகளில் அதிக கவனம் செலுத்தாமல் அனைவரையும் உள்ளடக்கிய இடமாக மாறுவதில் இருந்து வெகு தொலைவில் உள்ளன. 52.3 சதவீத பள்ளிகளில் கைப்பிடியுடன் கூடிய சரிவுகள் உள்ளன, மேலும் 34.4 சதவீத பள்ளிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிறப்பு கழிப்பறை வசதிகள் உள்ளன. இந்தியாவில் 28.4 சதவீத பள்ளிகளில் மட்டுமே தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தும் மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.