சென்னை: முன்னாள் முதல்வரும், தமிழக மக்களின் மனதில் நிறைந்த கர்மவீரருமான காமராஜரை குறித்து திருச்சி சிவா பேசிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, திருச்சி சிவா உடனடியாக நிபந்தனையின்றி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, காமராஜர் ஒரு கறை படாத தலைவர். வெறும் மைக் கிடைத்ததற்காக அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் பேசுவது வேதனை அளிக்கிறது. திருச்சி சிவா, பேசும் முன் தன்னுடைய தகுதியை சுயபரிசோதனை செய்திருக்க வேண்டியது தான்.

கர்மவீரர் எளிமையின் முன்னோடி. இறக்கும் போது அவரிடம் சொந்தமாக வீடும், சொத்தும் இல்லாத நிலை. வெறும் சில வேஷ்டிகள் மட்டுமே இருந்தன. இவரைப் பற்றி தவறாக பேசியிருப்பது அனைவருக்கும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சிவா கூறிய “ஏசி இல்லாமல் காமராஜர் தூங்க மாட்டார்” என்பது உண்மையல்ல என ராஜேஷ் கூறினார். காமராஜர் மரத்தடியில் தூங்கியவர். காவலாளிகளை தூங்கச் சொல்லியவர். இந்த மாதிரியான ஒருவர் மீது இந்தவகையான விமர்சனம் முழுமையாகக் கண்டிக்கத்தக்கது எனவும் கூறினார்.
பெரியார் கூட காமராஜரை மக்களின் காக்கும் ரட்சகர் என புகழ்ந்திருக்கிறார். இளைஞர்களுக்கு வழிகாட்டிய காமராஜரை இழிவாகப் பேசியது அனைத்துக் கட்சிகளுக்கும் அப்பாற்பட்ட கோபத்தை ஏற்படுத்துகிறது.
9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர், 9 ஆண்டுகள் முதல்வராக இருந்து பதவியை விலக்கி மக்கள் பணிக்காக செல்பவர். பல பிரதமர்களை உருவாக்கியவர், “கிங்மேக்கர்” என அழைக்கப்பட்டவர்.
எளிமையும் நேர்மையும் அவரது அடையாளம். ரஷ்யா செல்வதற்கும் வேஷ்டி சட்டைதான் அவர் தேர்ந்தெடுத்த உடை. அவரைப் பற்றி பேசும் முன் இருமுறை யோசிக்க வேண்டும்.
திமுக தலைமையும் திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து இவ்வாறான தனிமனித ஒழுக்கம் இல்லாத பேச்சுகள் நடந்தால் அதற்கான கடும் விளைவுகள் இருக்கும் என எச்சரித்துள்ளார்.