பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 47,013 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சோ. மதுமதி கூறியதாவது:- பள்ளிக் கல்வித் துறையில் முதன்மைக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், சட்ட அலுவலர், ஆசிரியர் உள்ளிட்ட 55 வகையான பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து முடிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவின் கூட்டம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. 52,578 தற்காலிக பணியிடங்களில் 47,013 பேரை நிரந்தரம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆசிரியர்கள் உட்பட 5,418 தற்காலிக பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அந்த பணியிடங்களை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுகளை ஏற்று தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 47,013 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும். மேலும், ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு 5,418 பணியிடங்கள் ரத்து செய்யப்படும். அதன்படி 5,741 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும், 28,030 பட்டதாரி ஆசிரியர்களும், 1,880 கணினி பயிற்றுநர்களும் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளனர். மேலும், 3,073 இளநிலை உதவியாளர்கள், 5,711 ஆய்வக உதவியாளர்கள், 3,035 தொழிற்கல்வி ஆசிரியர்களும் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
திட்ட ஒருங்கிணைப்பாளர், நிர்வாக அலுவலர், உதவி கணக்கு அலுவலர், உதவி இயக்குனர் (இ-கவர்னன்ஸ்) ஆகிய பதவிகளில் தலா ஒரு பணியிடங்கள் மட்டுமே நிரந்தரமாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நன்றியும், வரவேற்பும் தெரிவித்துள்ளன.