கிருஷ்ணகிரி/ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, வேப்பனப்பள்ளி, பர்கூர், ஊத்தங்கரை, சூளகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடங்கிய மிதமான மழை காலை 7.15 மணி வரை நீடித்தது.
இதையடுத்து, கனமழையில் நனைந்தபடியே மாணவர்கள் சிரமத்துடன் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றனர். காலை 10 மணி முதல் விட்டு விட்டு மழை பெய்தது. கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதியம் 1 மணியளவில் பலத்த மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. மேலும், வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழைநீர் கழிவுநீருடன் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
குறிப்பாக கிருஷ்ணகிரி நகர், பெங்களூரு ரோடு, ரவுண்டானா பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் சாலையில் ஓடுவதால், வாகனங்கள் சாலையில் ஊர்ந்து சென்றன. மேலும், நகரின் பல இடங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டது.
தேன்கனிக்கோட்டை ஓசூர் அருகே மத்திகிரியில் நேற்று பெய்த மழையில் சாலையோரம் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது. இதனிடையே நேற்று மதியம் அனைத்து பள்ளிகளுக்கும் அரை நாள் விடுமுறை அளித்து கலெக்டர் கே.எம்.சரயு உத்தரவிட்டார்.
மேலும், மழை நின்றவுடன் பள்ளி வாகனங்களில் அனைத்து மாணவர்களையும் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பவும், அதன் பின்னரே ஆசிரியர்கள் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறுகையில், ”மாவட்டத்தில் காலை முதல் மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்த்தோம்.ஆனால், மதியம் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டதால், அரசு பள்ளி மாணவர்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
காலையில் வீட்டிற்கு பள்ளிக்கும், மதியம் பள்ளியிலிருந்து வீட்டிற்கும் மழையில் நனைந்தபடி செல்கின்றனர்,” என்றார். மாவட்டம் முழுவதும் நேற்று காலை 7 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்) விவரம்: பாரூர் 34.6, நெடுங்கல் 26, பெனுகொண்டாபுரம் 25.2, ராயக்கோட்டை 20, கிருஷ்ணகிரி 19.2, சின்னாறு அணை, போச்சம்பள்ளி தலா 17, கிருஷ்ணகிரி அணை 16.2, டங்கன்அம்பள்ளி 15, பூளகிரி 15 , ஊத்தங்கரை மற்றும் ஓசூரில் தலா 11 மி.மீ., கெலவரப்பள்ளி அணையில் 7 மி.மீ. மழை பதிவானது.