மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய துவங்கியுள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 9,601 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 7,691 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 116.13 அடியாகவும், நீர் இருப்பு 87.43 டிஎம்சியாகவும் இருந்தது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் வினாடிக்கு 10,000 கனஅடி நீர்வரத்து இருந்தது. தற்போது குறைந்து வருகிறது. நேற்று மாலை நீர்வரத்து வினாடிக்கு 6,500 கன அடியாக குறைந்தது.