சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய தேர்வில் ஏற்பட்ட மொழிபெயர்ப்பு தவறால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை “முடிவெட்டும் கடவுள்” என குறிப்பிடப்பட்டிருப்பது அய்யா வழி பின்பற்றுபவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் ஆன்மீக வரலாற்றில் முக்கிய இடம் பெற்றவரான அய்யா வைகுண்டரின் பெயரை தவறாக விளக்கியது, சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களிலும் கண்டனத்தை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்டரின் மரியாதையை பறிக்கும் வகையில் நடந்த இந்தத் தவறு, அரசின் அலட்சியத்தின் விளைவாகும் என அவர் கூறினார். “முடிசூடும் பெருமாள்” என்று அழைக்கப்படும் அய்யா வைகுண்டரை, “the god of hair cutting” என மொழிபெயர்த்திருப்பது, வரலாற்றையும் மத உணர்வுகளையும் காயப்படுத்துவதாக அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும், தேர்வாணையம் உடனடியாக மன்னிப்பு கோரியும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைவும் தனது கருத்தை பதிவு செய்தார். அவர், “இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் வகையில் திமுக அரசு தேர்வுகளை அலட்சியமாக நடத்துகிறது” என குற்றம்சாட்டினார். “It Begged the United Nations Award” என்ற கேள்வியையும் அவர் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வுகளில் உள்ள குறைகளை எடுத்துரைத்தார். தேர்வு நடத்தும் பொறுப்பில் இவ்வாறான தவறுகள் இடம்பெறுவது, மாணவர்களின் கனவுகளை சீரழிக்கக் கூடும் என அவர் எச்சரித்தார்.
இச்சம்பவம் தற்போது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அய்யா வைகுண்டர் பெயரில் ஏற்பட்ட தவறான விளக்கம், தேர்வாணையத்தின் தரத்திற்கே கேள்விக்குறி எழுப்பியுள்ளது. இதனால், எதிர்காலத்தில் தேர்வாணையம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இத்தகைய பிழைகள் மீண்டும் நடக்காமல் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது அடுத்த கட்ட விவாதமாகியுள்ளது.