மும்பை துறைமுக ஆழப்படுத்தும் திட்டத்தில் ரூ.800 கோடி ஊழல் தொடர்பாக டாடா மற்றும் ஜேஎன்பிடி முன்னாள் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மும்பைக்கு அருகிலுள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை (ஜேஎன்பிடி) ரூ.800 கோடி செலவில் ஆழப்படுத்த திட்டமிடப்பட்டது. இந்த திட்டம் மிகைப்படுத்தப்பட்டதாகவும், அதில் ஊழல் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ 3 ஆண்டுகளாக முதற்கட்ட விசாரணை நடத்தியது. இதன் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டங்களின் கீழ் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. முன்னாள் ஜேஎன்பிடி தலைமை பொறியாளர் சுனில் குமார் மாதாபவி, டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் (டிசிஇ) முன்னாள் திட்ட இயக்குநர், போஸ்கலிஸ் ஸ்மித் இந்தியா எல்எல்பி, ஜன் தே நுல் டிரெட்ஜிங் இந்தியா மற்றும் சில அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, இது தொடர்பாக கடந்த புதன்கிழமை மும்பை மற்றும் சென்னையில் 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.