சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. புஸ்ஸி ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி எம். ஜோதிராமன், ஆதவ் அர்ஜுனா சமூக வலைதளத்தில் போட்ட பதிவுகள் குறித்து கடுமையாக எச்சரித்தார். அவர் எழுதிய பதிவின் நோக்கம், அதன் பின்புலம் குறித்து விசாரணை அவசியம் எனவும், சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

மேலும், விஜய் பிரச்சார ஏற்பாட்டாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். கரூர் துயர சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் எந்த பொறுப்பையும் ஏற்கவில்லை என்றும், மக்கள் உயிரிழந்தபோது நிகழ்ச்சியிலிருந்து விலகிச் சென்றனர் என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. சமூக பொறுப்பு கூட இல்லாமல் நடந்துகொண்டதாகவும் நீதிபதி கடும் அதிருப்தி வெளியிட்டார்.
தமிழக அரசு தரப்பில், தவெக நிர்வாகிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கூட்ட நெரிசலுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. அனுமதி வழங்கப்பட்ட இடத்திற்கு பதிலாக வேறு இடத்தில் மக்கள் திருப்பப்பட்டதால் நிலைமை மோசமடைந்தது என்றும் அரசு வாதம் முன்வைக்கப்பட்டது.
விஜயின் பிரச்சாரத்தில் தொடர்ந்து விதிமீறல்கள் நடந்ததாகவும், ஏற்பாட்டாளர்கள் முறையான அறிவிப்புகள் வழங்காமல் தவறினர் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. “ஒரு சொல் கூட பெரிய பிரச்சனைக்குக் காரணமாகலாம், அதனால் பொறுப்பற்ற பேச்சுகள், பதிவுகளை உடனே தடுக்க வேண்டும்” என நீதிபதி கடுமையாக எச்சரித்தார்.