சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2001-2006 அதிமுக ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடிக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை சிவகங்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்பிறகு, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சிவகங்கை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் 2012-ல் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் வகையில், உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் நேரில் வழக்கை எடுத்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், ‘‘முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை வாபஸ் பெற அனுமதித்தும், குற்றவாளிகளை விடுதலை செய்தும் சிவகங்கை நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது சகோதரர் ஒருவர் இறந்துவிட்டதால் அவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. மற்றவர்கள் மீதான வழக்கை, சிவகங்கை நீதிமன்றம், மதுரை எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு, நவ., 27-ல் மாற்ற வேண்டும். அதன்பின், மதுரை சிறப்பு நீதிமன்றம், சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி, ஆஜராகி ஜாமீன் வழங்கலாம்.
வழக்கை இழுத்தடிக்க முயன்றால் ஜாமீன் ரத்து செய்யப்படலாம். இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு அறிக்கையை, துணை அறிக்கையாக எடுத்து, மதுரை சிறப்பு நீதிமன்றம், 2025 ஜூன், 31-ம் தேதிக்குள், தினந்தோறும் விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக, உயர் நீதிமன்ற பதிவுத்துறையிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என உத்தரவிட்டார்.