கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை காரணமாக கடந்த ஒரு வாரமாக சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. புத்தாண்டை கொண்டாட நேற்று வார விடுமுறை மற்றும் டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்துள்ளது. இதனால், கொடைக்கானலில் அனைத்து விடுதிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டதால், அடுத்த சில நாட்களுக்கான தங்கும் இடங்களும், முன்பதிவும் நிரம்பிவிட்டன.
மேலும், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் குவிந்ததால், கொடைக்கானல் நுழைவு வாயில், சில்வர் ஃபால்ஸ், நகர் பகுதி மற்றும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் பல மணி நேரம் நெரிசல் நீடித்ததால், சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கொடைக்கானல், புத்தாண்டு, ரஷ் கொடைக்கானலில் தூண்பாறை, குணா குகை, பைன் வனம், மோயர் பாயின்ட் பகுதிகளின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தூண்பாறை பகுதியில் மட்டும் வெள்ளை பஞ்சு மேகங்கள் சூழ்ந்ததால் சுற்றுலா பயணிகள் காத்திருந்து மகிழ வேண்டிய நிலை ஏற்பட்டது. நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், செயற்கை நீரூற்றை பார்த்தும், ஏரி சாலையில் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மேலும், ஏரி சாலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக சைக்கிள் சவாரி சென்றனர்.
பிரையண்ட் பூங்காவில் பல வண்ண மலர்களைக் கண்டு மகிழ்ந்த அவர்களும் அங்குள்ள புல்வெளியில் அமர்ந்து ஓய்வெடுத்தனர். கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளி அருவி, வட்டக்கானல் அருவிகளில் பரவலாக தண்ணீர் கொட்டுகிறது. இங்கும் சுற்றுலா பயணிகள் குவிந்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். புத்தாண்டு வரை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என சுற்றுலாத்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.