பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. பழனி அருகே பாலசமுத்திரம் கிழக்கு தெருவை சேர்ந்த அலீப்ராஜா (40) என்பவரது வீட்டின் சுவர் மழைக்கு இடிந்து விழுந்தது.
மேலும் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. பழனி நகரில் 16 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து உள்ளது. 65 அடி உயரமுள்ள பாலாறு- பாலாறு அணையின் நீர்மட்டம் 49 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வினாடிக்கு 75 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 9 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணை பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
66.47 அடி உயரமுள்ள வரதமாநதி அணை முழுமையாக நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 147 கன அடி தண்ணீர் வருகிறது. வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 80 அடி உயரமுள்ள குதிரை அணையின் நீர்மட்டம் 67.30 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 52 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 7 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணை பகுதியில் 7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழையால் அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.