சேலம் மாவட்டத்தில் விவசாய நிலத்திற்கு வங்கி கடன் பெற தேவையான தடையில்லா சான்றிதழ் கோரி விவசாயி ஒருவர் விண்ணப்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த தாசில்தார் கோவிந்தராஜ், சான்றிதழ் வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. விவசாயி தமிழரசன், அதனை வழங்க முடியாது என கூறியபோதிலும், இறுதியில் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என தாசில்தார் வற்புறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவசாயி தமிழரசன், லஞ்சம் கொடுக்க விரும்பாமல் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கம்போல ரசாயனப் பொடி தடவிய பணத்தை அளித்து அனுப்பினர். எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் இருந்த டிரைவர் வெங்கடாஜலத்திடம் ரூ.5 ஆயிரத்தை தமிழரசன் கொடுத்தபோது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் உடனடியாக சிக்கவைத்து கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பணியாற்றிய தாசில்தார் கோவிந்தராஜையும் அதிரடியாக போலீசார் கைது செய்தனர். டிரைவரும் தாசில்தாரும் கைது செய்யப்பட்டதால், அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாதாரணமான சான்றிதழுக்காகவே லஞ்சம் கேட்கப்பட்டிருப்பது, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.