சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 1,066 சுகாதார ஆய்வாளர்கள் (கிரேடு-II) நேரடியாக பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கு ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பொது சுகாதாரப் பணியில் நேரடி நியமனம் மூலம் 1,066 சுகாதார ஆய்வாளர்கள் (கிரேடு-II) பணியமர்த்தப்பட உள்ளனர். மாநில பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு இயக்ககத்தின் பிளஸ் 2 முடித்து 2 ஆண்டுகள் பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி மற்றும் சுகாதார ஆய்வாளர் பயிற்சி முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. எஸ்எஸ்எல்சி மதிப்பெண், பிளஸ் 2 மதிப்பெண், சுகாதாரப் பணியாளர் பயிற்சித் தேர்வு அல்லது ஹெல்த் இன்ஸ்பெக்டர் பயிற்சித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மதிப்பெண்களை கணக்கிடும் போது, சுகாதார பயிற்சி தேர்வுக்கு 50 சதவீத வெயிட்டேஜும், பிளஸ் 2 தேர்வுக்கு 30 சதவீத வெயிட்டேஜும், எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு 20 சதவீத வெயிட்டேஜும் வழங்கப்படும். உரிய கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு உள்ள விண்ணப்பதாரர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதனை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.