
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் கட்டுமானப் பணிகளில் ஏற்படும் கழிவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதோடு, அதை மீறுபவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 20,000 சதுர மீட்டர் வரை பரப்பளவு கொண்ட கட்டுமானங்களில் விதிமீறல் இருந்தால் ரூ.25,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.
500 சதுர மீட்டர் அளவுக்கு குறைவான கட்டிடங்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். விதிமீறல்களுக்கு 10 நாள் அவகாசம் அளிக்கப்படும், ஆனால் அதற்குள் சரி செய்யாதால் அபராதம் கட்டாயமாக விதிக்கப்படும். இந்த நடைமுறைகள், கட்டுமானத் துறையில் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தவும், நகரத்தை தூய்மையாக பராமரிக்கவும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டன. மேலும், விருகம்பாக்கம் மற்றும் ஓட்டேரி ஆகிய பகுதிகளில் உள்ள கால்வாய்கள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டு, அவற்றை புனரமைக்கும் பணிக்காக ரூ.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நகரத்தில் காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கிலும், கட்டுமான பணிகள் சீராக நடைபெறவும் இந்த புதிய விதிகள் வரவேற்கப்படுகின்றன.