கோவை: மாநில பாடத்திட்டத்தின் கீழ் 37,576 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஜவுளிக் கழகத்திடம் இருந்து துணியைப் பெற்று சமூக நலத்துறையின் அங்கீகாரம் பெற்ற சங்கத்திடம் கொடுத்து சீருடைகள் தைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த கல்வியாண்டில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் வரை நடைபெற்றது. இதில், தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு தவிர மீதமுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. 1-ம் வகுப்புக்கு மட்டும் சீருடை வழங்குவதில் 7 மாத கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சமூக நலத்துறை மூலம் சீருடை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் ஆயத்த சீருடைகளை பயன்படுத்துவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
அருகிலுள்ள துணிக்கடைகளில் இருந்து ரூ. 200 மற்றும் ரூ. 400 வரை ரெடிமேட் சீருடைகளை வாங்கி பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும், பள்ளியில் சேரும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏற்கனவே படித்த மாணவர்களின் அளவின் அடிப்படையில், சீருடை அளவு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு அளவீடு செய்து சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், சரஸ்வதி பூஜை வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதன் பிறகு, முதல் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) எண் வழங்கப்பட்டது. மாணவர்களின் விவரம் தெரிய நவம்பர் மாதமாகிவிட்டது. பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி சேலைகள் வினியோகிக்கப்படும் நிலையில், தமிழ்நாடு ஜவுளிக் கழகத்திடம் இருந்து துணி கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஜவுளிக் கழகம், சமூக நலத்துறைக்கு சீருடைக்கான துணியை வழங்கியதால், 15 நாட்களுக்குள் தைத்து வழங்க சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இப்பணியை ஜனவரி 25-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், சமூக நலத்துறை சார்பில் கடந்த டிசம்பர் மாதம் முதல் அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 4,000 மாணவர்களுக்கும், மாநிலத்தில் சுமார் 2.83 லட்சம் மாணவர்களுக்கும் சீருடை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.