சென்னை: குற்றச்செயல்களை தடுக்கத் தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருநெல்வேலியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்டார்.
இதேபோல் சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஜான் ஈரோட்டில் காரில் சென்று கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டின.

இதுதவிர, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ரவுடிகள், தலைமறைவான குற்றவாளிகள், குற்றப் பின்னணி கொண்டவர்கள் என பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், குற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க வேண்டும். தடுக்கத் தவறும் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி எச்சரித்துள்ளார்.