தென்காசி: குற்றாலம் மெயின் அருவி பராமரிப்பு பணிகளை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக துவக்கியுள்ள நிலையில், பழைய குற்றாலம் அருவி பராமரிப்பு பணியையும் ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பழைய குற்றாலம் அருவியின் படிக்கட்டுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று 5-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அருவி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கட்டண கழிப்பறையின் தளம் பெயர்ந்து காணப்படுகிறது. உடை மாற்றும் அறைகளுக்கு கதவுகள் இல்லை. சிசிடிவி கேமரா கருவிகளும் சேதமடைந்துள்ளன.
கடந்த மே மாதம் வெள்ளத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில் படிக்கட்டுகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர்களும் மீண்டும் சேதமடைந்துள்ளன. தற்போது, நீர்வீழ்ச்சி பகுதி பராமரிப்பு, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.
இதற்கான நிதியை பெற்று டெண்டர் விடப்பட்ட பின்னரே பணிகளை மேற்கொள்ள முடியும் என நீர்வளத்துறையினர் தெரிவிக்கின்றனர். மாறாக, உள்ளாட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தால், மெயின் அருவி, ஐந்து அருவி போன்ற நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வசதியாக இருக்கும். மெயின் அருவியில் உள்ளது போல் பாசன வசதியை மட்டும் நீர்வளத்துறை வசம் ஒப்படைத்து அருவி பகுதி மற்றும் கட்டிடங்களை பராமரிக்கும் பணியை அய்யப்பேரி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.