இந்தியா முழுவதும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (DLC) 4.0 பிரச்சாரம் நவம்பர் 1 முதல் 30 வரை நடைபெற உள்ளது. ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, 1600 மாவட்டங்கள் மற்றும் துணை பிரிவு தலைமையகங்களில் இந்த முகாம்களை நடத்த உள்ளது. 19 ஓய்வூதிய விநியோக வங்கிகள் மற்றும் இந்திய அஞ்சலக பேமென்ட்ஸ் வங்கி ஆகியவற்றின் நிர்வாகிகள் பங்கேற்ற உயர்நிலை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆயுள் சான்றிதழ் என்பது, ஓய்வூதியதாரர்கள் தகுதியுடன் ஓய்வூதியத்தைப் பெறுகின்றனர் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் இதை சமர்ப்பிக்க வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் அக்டோபர் 1 முதல் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். ஜீவன் பிரமான் மொபைல் செயலி அல்லது இணையதளம் மூலம், வீட்டிலிருந்தபடியே சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் என்பது சிறப்பு.

ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகார முறையிலேயே இந்த டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கப்படுகிறது. வங்கிகளுக்கோ அலுவலகங்களுக்கோ செல்ல வேண்டிய அவசியமே இல்லை. அடையாள அட்டை, வயது சான்று, குடியிருப்பு சான்று, வங்கிக் கணக்கு விவரங்கள், வருமான அறிவிப்பு போன்ற ஆவணங்களுடன் ஜீவன் பிரமான் போர்ட்டல் மூலம் எளிதாக சமர்ப்பிக்கலாம். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வீட்டு வசதியும் இந்த முறை வழங்கப்பட உள்ளது.
முந்தைய பிரச்சாரங்களில், முக அங்கீகாரத் தொழில்நுட்பம் மூலமாக 50 லட்சம் சான்றிதழ்கள் உட்பட மொத்தம் 1.62 கோடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முறை தினசரி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, 1900க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட உள்ளது. விழிப்புணர்வை அதிகரிக்க வங்கிகள் மற்றும் அஞ்சலகம் அக்டோபர் மாதம் முதலே குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், சமூக ஊடகம், பதாகைகள் வழியாக பிரச்சாரம் செய்ய உள்ளது.