சென்னையில் நாளுக்கு நாள் பெருகும் மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரச்சனையாக மாறியுள்ளது. ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் மக்களை பொது போக்குவரத்தையே நம்புமாறு செய்ய்கிறது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில்வே, அதற்கான அடிப்படை சேவைகளை மேம்படுத்தி, பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் “டிஜிட்டல் பயணச்சீட்டு” அல்லது Store Value Pass (SVP) எனப்படும் வசதியை அறிமுகப்படுத்தியது. மெட்ரோ பயணிகள், சென்னை மெட்ரோ அதிகாரப்பூர்வ மொபைல் செயலியைப் பயன்படுத்தி, தங்களது கைபேசி எண்ணை பதிவு செய்து டிஜிட்டல் டிக்கெட் சேவையை பெறலாம். இந்த டிக்கெட் ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும்.
இந்த வசதியின் மூலம், பயணிகள் தங்களது மெட்ரோ ரயில் பயணங்களில் 20 சதவீத தள்ளுபடியை பெற முடியும். பயணச்சீட்டில் குறைந்தபட்சம் ₹50 முதல் அதிகபட்சமாக ₹3,000 வரை டாப்அப் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயணத்தின் அடிப்படையில் கட்டணத் தொகை கழிக்கப்படும். இது பயண செலவில் குறைவு மட்டுமல்லாமல், டிக்கெட் வாங்குவதற்கான நேரத்தை மிச்சப்படுத்துவதிலும் உதவியாக இருக்கிறது.
மேலும், இந்த டிஜிட்டல் பயணச்சீட்டு வசதி மெட்ரோ நிலையங்களிலுள்ள வாகன நிறுத்துமிடங்களிலும் பயன்படுத்த முடியும் என்பதையும் நிறுவனம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ சேவையின் இந்த மேம்பாடு, பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.