பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திமுக ஆட்சியின் உளவுத்துறையின் பெரும் தோல்வி என விமர்சிக்கப்படுகிறது. இதற்கு பொறுப்பேற்று செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என வழக்கம் போல் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், இந்த படுகொலை சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தனது சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் சகோதரர் திரு. ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார் என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றி பல இளைஞர்களின் கல்விக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவும் களப்பணியாற்றிய ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் தளத்திற்குப் பேரிழப்பாகும்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். மேலும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சூழலில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கவும் நமது முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சகோதரர் ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் – குடும்பத்தினர் – நண்பர்கள் அனைவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.