சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என இரண்டாக பிரித்து கடந்த ஜனவரி 24-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
இதையடுத்து, பிப்ரவரி 12-ம் தேதி அரசு, டான்ஜெட்கோ, தொழிற்சங்கங்கள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதிகாரிகள், ஊழியர்களை இவ்விரு நிறுவனங்களுக்கு மாற்றுவது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, 79 பேரை பணியிட மாற்றம் செய்து ஜூன் 29-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, தமிழ்நாடு மின் வாரிய கணக்காளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சங்கம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சங்கம் சார்பில் மூத்த வக்கீல் சிங்காரவேலன், தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், டான்ஜெட்கோ சார்பில் மூத்த வக்கீல் வில்சன் ஆஜராகினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டான்ஜெட்கோவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரியும் போது, 79 பேர் மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும், மனுதாரரை கட்டுப்படுத்தும் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.