சென்னை: குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- குமரி கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 19-ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 20-ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நவம்பர் 21 முதல் நவம்பர் 24 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று தென்கிழக்கு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றும், அவ்வப்போது மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும். வங்கக் கடல் பகுதிகளில் நவம்பர் 21-ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலின் தெற்குப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
நவம்பர் 22-ம் தேதி, தென்கிழக்கு வங்கக் கடலின் தெற்குப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும். அரபிக்கடலில், இன்று லட்சத்தீவுகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும்.
எனவே மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.