தஞ்சாவூர்: தீபாவளி பண்டிகை முன்னிட்டு தஞ்சை டெல்டாவில் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது புத்தாடை இனிப்பு வகைகள் அழகு பொருட்கள் பட்டாசுகள் உள்ளிட்ட தீபாவளி பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.
தீபாவளி பண்டிகை வருகிற 20 தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்பு வகைகள் தான் முதலிடம் பிடிக்கும். இவற்றை வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டமும் அதிகளவில் இருக்கும். தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரையில் பொதுமக்கள் புத்தாடை, பட்டாசு வாங்க தொடங்கிவிட்டனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தஞ்சையில் திரும்பிய பக்கமெல்லாம் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. கிராமப்புறங்களில் இருந்து ஏராளமானோர் தஞ்சை நோக்கி படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக ஜவுளி, பட்டாசு கடை முன்பு கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது.
இனிப்பு கடைகளிலும் வழக்கத்தைவிட அதிகளவில் பொதுமக்கள் தென்படுகின்றனர். தஞ்சை காந்திஜிசாலை, அண்ணாசாலை, கீழராஜவீதி. வீதிதெற்குவீதி. உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கூட்ட நெரிசல் உள்ளது. இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.