பெங்களூரு: கர்நாடக துணை முதல்வரும் நீர்ப்பாசன அமைச்சருமான டி.கே. சிவகுமார், மேல் பத்ரா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் தென்பெண்ணை நதிப் படுகையில் கட்டப்படும் அணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நேற்று மாலை மத்திய அமைச்சர் சோமண்ணாவுடன் விவாதித்தார். பின்னர், டி.கே. சிவகுமார் கூறியதாவது:-
தென்பெண்ணை நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு கடந்த 2-ம் தேதி நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. கர்நாடக அரசு விரைவில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உள்ளது. இந்தப் பிரச்சினையில் தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக அரசு விரும்புகிறது. அதன் மூலம் சுமுகமான தீர்வைக் காண விரும்புகிறது. இரு மாநில பிரதிநிதிகளின் சந்திப்புக்கான தேதி விரைவில் இறுதி செய்யப்படும்.
தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டுவதை தமிழக அரசு எதிர்த்துள்ளது. அணை கட்டுவது குறித்து இரு மாநிலங்களையும் அழைத்துப் பேசுவதாக மத்திய அமைச்சர் சோமண்ணா கூறியுள்ளார். இந்தப் பிரச்சினைக்கு நடுவர் நீதிமன்றம் அமைப்பது காலதாமதமாகும் என்றும் அவர் கூறினார். எனவே, பேச்சுவார்த்தைதான் சரியான தீர்வாக இருக்கும் என்றும் சிவகுமார் கூறினார்.