2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சிகளும் தீவிர ஆயத்தத்தில் இறங்கியுள்ளன. ஆளும் திமுகவிலும் தேர்தல் திட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், முக்கியமான ஒரு தொகுதி விஷயத்தில் கட்சி நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளர்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் கையில் உள்ளது. ஆனால் வரும் தேர்தலில் அந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்க கூடாது என திமுகவினர் தங்கள் கருத்தை ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர். இது மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
தற்போது ஸ்டாலின், ஒரே நாளில் மூன்று தொகுதி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று தியாகராய நகர், மயிலாப்பூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளின் நிர்வாகிகளை சந்தித்த போது, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தொடர்பான இந்த கோரிக்கையும் எழுந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2021 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட செல்வப்பெருந்தகை அதிமுக வேட்பாளர் பழனியை 10,879 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று எம்எல்ஏயாக தேர்வானார். ஆனால் தற்போது பரந்தூர் விமான நிலைய திட்டம் அதே தொகுதியில் உருவாகி வருவதால், அந்த விவகாரம் ஆளுங்கட்சிக்கு எதிராக போகலாம் என்ற எண்ணத்தில், இந்த தொகுதியை கூட்டணிக்குள் வைக்காதீர்கள் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதேவேளை, இதன் மூலம் செல்வப்பெருந்தகை மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா அல்லது வேறு தொகுதிக்கு மாற்றப்படுவாரா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், இதுபோன்ற தொகுதி ஒதுக்கீடு விவகாரங்கள், அரசியல் கூட்டணிகளில் புதிய திசைகளை உருவாக்கும்.