திமுக எம்பி சு. கல்யாணசுந்தரம், தஞ்சை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த முடிவை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். புதிய பொறுப்பாளராக சாக்கோட்டை அன்பழகன் எம்எல்ஏ நியமிக்கப்படுகிறார். இதனால் தஞ்சை மாவட்ட திமுகவில் பரபரப்பான நிலை உருவாகியுள்ளது.

துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் புதிய செயலாளருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கல்யாணசுந்தரம், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவராகவும், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட்டின் தலைவராகவும் உள்ளார்.
இவர் பம்பப்படையூர் வன்னியர் தெருவைச் சேர்ந்தவர். 1940 ஜூன் 24ஆம் தேதி பிறந்தவர், தற்போது 82 வயதாகிறார். இவரது தந்தை சுந்தர்ராஜன், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். 1952ல் அவர் பூமிதான இயக்கத்திற்கு சொந்த நிலத்தை தானமாக வழங்கினார்.
கல்யாணசுந்தரம் தந்தையின் பாதையைப் பின்பற்றி, 16-வது வயதில் அரசியலில் நுழைந்தார். பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை ஏற்று மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டார். 1972 முதல் 1998 வரை திமுகவில் ஒருங்கிணைந்த கும்பகோணம் ஒன்றியச் செயலாளராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார்.
இவர் மாவட்ட கூட்டுறவு பால்வள தலைவராகவும், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு மனைவி கனகவள்ளி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். மகன் முத்துச்செல்வன் தற்போது மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக உள்ளார்.