சென்னை: பாஸ்ட் புட் சாப்பிட்டால் பசி வராது என்றும், பீட்சா, பர்கர் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் எச்சரித்துள்ளார். தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில், செறிவூட்டப்பட்ட சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் நேற்று முன்தினம் நடந்தது. சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் நோக்கில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தெருக் கண்காட்சி முறையில் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு உணவு பாதுகாப்பு துறை சென்னை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நெஞ்சுவலி உள்ளிட்ட துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சிறுதானிய உணவுகளின் தன்மை, பயன்கள் குறித்தும் தெருக்கூத்துகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். தற்போது சிறுதானியங்களின் சிறப்புகள் பலருக்கு தெரிவதில்லை.

மக்கள் சிறுதானியங்களைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். அதை அடையும் நோக்கில், பெசன்ட் நகர் கடற்கரை, மெரினா கடற்கரை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பல்வேறு பகுதிகளில் தெருக் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். பிட்சா, பர்கர், சிப்ஸ், பிரெஞ்ச் ப்ரைஸ் போன்ற துரித உணவுகளை சாப்பிடும் போது பசி எடுப்பதில்லை. அவற்றில் நிறைய சீஸ், வெண்ணெய் மற்றும் வறுத்த உருளைக்கிழங்கு உள்ளது, இது நமக்கு அதிக கலோரிகளை அளிக்கிறது.
இது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். துரித உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று நான் கூறவில்லை. மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே அவற்றை சாப்பிடுவது நல்லது. ஆனால் தொடர்ந்து பீட்சா, பர்கர் சாப்பிட்டால் கண்டிப்பாக மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டியிருக்கும். எந்நேரமும் தொற்றிக்கொண்டிருப்போம். மாறாக சிறுதானிய உணவுகளையே உண்ண வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.