சென்னை: புறநகர் பகுதிகளில் வீட்டு மனைகள் வாங்க பட்டா விஷயத்தில் கவனமாக இருக்கணும். எதற்காக தெரியுங்களா?
புறநகர் பகுதிகளில் வீட்டுமனைகள் வாங்குபவர்கள் சம்பந்தப்பட்ட மனைக்கான பட்டா விஷயத்தில் சற்று கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.
பஞ்சமி நிலம் அதாவது டி.சி நிலம் 0 (Depressed Class Land) என்பது நிலமற்ற ஏழை பட்டியல் பிரிவு மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக 1892-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட வேளாண் விளை நிலங்கள் ஆகும்.
வருவாய்த்துறை பதிவேடுகளில் உள்ள விளை நிலங்களில் பஞ்சமி நிலம் என்பதை தனியாகவும், மற்ற நில வகைகளை நத்தம் புறம்போக்கு, புறம்போக்கு, மானாவாரி, தரிசு, நீர்ப்பாசன சாகுபடி நிலம் என்றும் வகைப்படுத்தி வைக்கப்பட்டன.
ஆங்கில அரசாங்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக அளித்த பஞ்சமி நிலங்களை ஒடுக்கப்பட்ட பட்டியல் இன மக்களைத் தவிர வேறு யாரும் வாங்கக் கூடாது என்றும், அவ்வாறு வாங்கினால் அந்த விற்பனை செல்லாது என்ற கண்டிசன் இன்றும் சட்ட நடைமுறையில் உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பட்டியல் சமூக மக்களுக்குத் தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் மொத்த பரப்பளவு சுமார் 12 லட்சம் ஏக்கர் ஆகும்.
பஞ்சமி நிலங்களை பொறுத்தவரை, பயிர் செய்தோ அல்லது வீடு கட்டிக் கொண்டோ பட்டியல் சமூக மக்கள் அனுபவிக்க முடியும். பஞ்சமி நிலங்களைப் பிற சமூகத்தினர் வாங்க இயலாது. அப்படியே மாற்று சமூகத்தினர் ஆக்கிரமித்தாலும், வாங்கினாலும் அது செல்லாது என்பது சட்டமாகும்.
பஞ்சமி நிலம் பற்றி அறிய அதன் பட்டா பற்றி அறிந்து கொள்வது முக்கியம். அதற்கு இரண்டு வழிகள் உள்ளன. அதாவது, சம்பந்தப்பட்ட மனை அல்லது இடம் அமைந்துள்ள பகுதி கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள பட்டா சம்பந்தப்பட்ட மேனுவல் அ-பதிவேடுகளை பார்வையிட்டு கண்டறியலாம்.
கண்டிசன் நிலம், கிரயம் தடை செய்யப்பட்ட நிலம், டி.சி நிலம் என்று குறிப்புகள் இருந்தால் எச்சரிக்கையாக செயல்படலாம்.
சம்பந்தப்பட்ட மனை உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆர்.எஸ்.எல்.ஆர் (ReSettlement Land Record – RSLR) ஆவணத்தை பெற்று கவனிக்க வேண்டும். அதில் டி.சி நிலம் (Depressed Class Land) என்ற குறிப்பு இருக்கும் பட்சத்தில் அது பஞ்சமி நிலம் என்பதை அறிந்து எச்சரிக்கையாக செயல்படலாம்.
நகர்ப்பகுதிகள் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வாங்கிய அல்லது வாங்க விரும்பும் குறிப்பிட்ட மனை அல்லது நிலம் குறித்து சந்தேகம் எழும் நிலையில் பட்டா, சிட்டா, அடங்கல் அ-பதிவேடு மற்றும் RSLR ஆகிய ஆவணங்களை கவனிக்க வேண்டும்.