சென்னை: தமிழக உணவு பாதுகாப்பு துறை கூடுதல் கமிஷனர் தேவபார்த்தசாரதி கூறியதாவது:- உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சில முக்கிய திருத்தங்களை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, மொத்த விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள், போக்குவரத்து, கிடங்குகள், இறக்குமதியாளர்கள், உணவுப் பொருட்களை மட்டும் விற்கும் இதர வணிகர்கள், பெட்டிக்கடைகள் போன்றவற்றுக்கு உடனடியாக உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழைப் பெற தட்கல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தவுடன், ஓராண்டுக்கு அனுமதி வழங்கப்படும். பின், சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் ஆய்வு நடத்தி, நிரந்தர சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தகவலுக்கு, https://foscos.fssai.gov.in ஐப் பார்வையிடவும்.
மேலும், தெருவோரம் அல்லது தள்ளு வண்டிகளில் உணவு விற்கும் வியாபாரிகளிடம் பதிவு சான்றிதழ் கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தற்போது, பதிவுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், முழுமையான இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அவ்வாறு விலக்கு அளிக்கப்பட்டால், பதிவுச் சான்று இலவசமாக வழங்கப்படும்.
உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் இல்லாமல் அல்லது காலாவதியான உரிமத்துடன் உணவு வணிகத்தை நடத்துவது தண்டனைக்குரியது. அப்படி தொழில் செய்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.