மத்திய, மாநில அரசுகள் மற்றும் ராணுவ ஓய்வூதியர்கள் வாழ்வு சான்றிதழ்களை சமர்பிக்க வசதியாக அனைத்து தபால் நிலையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வீட்டிலிருந்தும் இந்த சேவையைப் பெறலாம் என தபால் துறை அறிவித்துள்ளது. சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
மத்திய, மாநில அரசுகள், ராணுவம் போன்றவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், தொடர்ந்து ஓய்வூதியம் பெற, ஆண்டுதோறும் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், ஓய்வூதியம் பெறுவோர் வாழ்க்கைச் சான்றிதழை நேரில் சமர்ப்பிப்பதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில், டிஜிட்டல் வாழ்வு சான்றிதழ் (ஜீவன் பிரமாண்) திட்டத்தை மத்திய அரசு 2014-ல் அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின் மூலம், தபால் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியம் பெறுவோர், கைரேகையை பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை வீட்டிலேயே சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. தபால்காரர்கள் ஓய்வூதியம் பெறுபவர்களின் வீடுகளுக்குச் சென்று இந்த சேவையை வழங்குகிறார்கள்.
இதற்காக தபால்காரருக்கு சேவைக் கட்டணமாக ரூ.70 செலுத்த வேண்டும். டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட் சேவையைப் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம். https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதளம் மூலமாகவும் அல்லது ‘Postinfo’ செயலி மூலமாகவும் கோரிக்கையை பதிவு செய்யலாம்.
இச்சேவையை வழங்க அனைத்து தபால் நிலையங்களிலும் நவம்பர் 1-ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.