தமிழக சட்டப் பேரவை கூட்டம் வரும் நாட்களில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும். ஆனால் கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடைந்தது.
சட்டசபை கூட்டம் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடந்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி கூட்டத்தை விரைவுபடுத்தும் வகையில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதற்காக, தமிழ்நாடு சட்டசபை விதிகள் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சமீபத்தில், சபாநாயகர், சட்டசபையில் இதற்கான அறிவிப்பை முறைப்படி அறிவித்து, விதிகளில் திருத்தம் செய்தார். தமிழக சட்டசபை விதிகள் குழு கொண்டு வந்த திருத்தம் அப்படியே தொடரும் என்பதால், இனி வரும் காலங்களில் சட்டசபை கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் சட்டசபை கூட்டம் காலை 9.30 மணிக்கு தான் தொடங்கும். ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பிறகு காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது. தற்போது மீண்டும் திமுக ஆட்சியில் பழைய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.